பெரிய தமிழ்க் கவிஞர்கள், அறிஞர்களை ஒரே மேடையில் பார்ப்பது அபூர்வம். அப்படி ஒரு அபூர்வ நிகழ்வாக அமைந்தது 'உடும்பன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா. இந்த விழாவில் தமிழ் இலக்கியத் துறையிலும், திரைப்பாடல்களிலும் சாதனைகள் படைத்த தமிழ்க் கவிஞர்களை ஒரே மேடையில் அமர வைத்தார் இயக்குநர் எஸ். பாலன். மாடர்ன் சினிமா (தமிழ் சினிமா பட டிவிடிகள் வெளியிடும் நிறுவனம்) தயாரிக்கும் 'உடும்பன்' படத்தின் இன்னொரு சிறப்பு, இந்தப் படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் 'அங்கே இடிமுழங்குது' என்ற பாடலையும் இப்படத்தில் இடம்பெறச் செய்துள்ளனர். படத்தினை எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கிறார் எஸ். பாலன். இப்படத்தின் கதாநாயகனாக பைக் ரேஸ் வீரரான திலீப் ரோஜரும், கதாநாயகிகளாக சனா, கீத்திகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா திங்களன்று மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் 'உடும்பன்' படத்தின் பாடல் குறுந்தட்டை வெளியிட, பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனும், பட்டுக்கோட்டையாரின் மகன் குமாரவேலுவும் பெற்றுக் கொண்டனர். கவிக்கோ அப்துல் ரகுமான் பேசுகையில், "இங்கே கூடியுள்ள கவிஞர் பெருமக்களைப் பார்க்கும் போது மிகுந்த மன நிறைவாக உள்ளது. நாங்கள் அனைவரும் வேறு வேறு முகாமில் இருந்தாலும், தமிழ் என்பது பொதுவான அடையாளமாக உள்ளது. முகாம் வேறு, முகம் ஒன்று! புலமைப்பித்தன், நா காமராசன், பொன்னடியான், காமகோடியன், பூவை செங்குட்டுவன், அறிவுமதி என இவர்களைப் பார்க்கும்போது மனம் பூரிப்பாக உள்ளது. இவர்களையெல்லாம் ஒன்று சேர்த்த இயக்குநர் பாலனை பாராட்டுகிறேன்.
என்னிடம் இங்கே ஒரு கேள்வி கேட்டுள்ளனர். கவிதை ஆணா பெண்ணா என்றனர். என்னுடைய பதில், பெண்ணாக இருந்த கவிதையை ஆணாக்கிக் காட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்! அந்த ஆணின் கையிலே ஆயுதம் கொடுத்து போராடச் சொன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். இவர்கள் எழுதிய இப்பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படம் வெற்றி பெற்றால் தமிழ் இனம் வெற்றி பெற்றதாக அர்த்தம்" என்றார். இப்போதிருக்கும் கவிஞர்களை விட்டு விட்டு, அக்காலக் கவிஞர்களின் பாடலை பயன்படுத்தியது ஏன்? என்ற கேள்விக்கு இயக்குநர் பாலன் பதிலளிக்கையில், "இப்போதுள்ள புதிய பொருளாதாரக் கொள்கை, நம் நாட்டின் பண்பாட்டைக் கெடுப்பதாக இருக்கிறது. அதை இடித்துக் காட்ட பொதுவுடமைவாதிகளான பாவேந்தரின் பாடல்களும், பட்டுக்கோட்டையாரின் பாடல்களும்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு," என்றார். அப்போ.. அடுத்த படத்துக்கு எந்த கவிஞர்கள கூப்பிடப்போறீங்க.....?
No comments:
Post a Comment