Tamil News

Friday, January 13, 2012

2011 : தமிழ் திரையுலகின் புதுமுகங்கள்...



தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் புதுமுகங்கள் வருகை அதிகமாக இருக்கும். இவ்வாண்டு  தமிழ் திரையுலகில் புதுமுக நாயகர்கள் யாருமே பிரகாசிக்கவில்லை.

'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த சர்வானந்த மட்டுமே இருக்கிறார் என்றாலும் அவர் திரையுலகிற்கு புதியவர் இல்லை.2011 ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமாகி சொல்லி கொள்ளும் அளவிற்கு இருந்த புதுமுகங்கள் பற்றிய ஒரு பார்வை:



தியாகராஜன் குமாராஜா (ஆரண்ய காண்டம் ) : எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் ஆரண்ய காண்டம் மாதிரி ஒரு படம் இயக்கி இருக்கிறார் என்பது தான் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. தமிழ் திரையுலக விமர்சகர்கள் மற்றும் இந்தியின் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் உட்பட பல இயக்குனர்கள் பாராட்டினார்கள்.

பல்வேறு விருதுகளை பெற்ற இப்படம் தமிழக மக்களிடையே வரவேற்பை பெற விட்டாலும், அடுத்த அடுத்த படங்கள் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது.





எம்.சரவணன் (எங்கேயும் எப்போதும் ) : காமெடி, பாடல்கள், பார்ப்பவர்களுக்கு ஒரு மெசேஜ் என அனைத்தும் கலந்த ஒரு படம். துல்லியமான திரைக்கதை, எதார்த்தமான பாத்திர படைப்பு என படத்தில் கவனமாக அமைத்தது இவரது ஹைலைட்.

படம் பார்த்தவர்கள் மனதில் படத்தின் இறுதியில் வரும் ''அப்பா ப்ளீஸ், வேகமாப் போகாதீங்க'' என்கிற சிறுமியின் குரல் இன்றும் எதிரொலிக்கிறது. அடுத்த படம் ஆர்யாவுடன் கைகோர்த்து இருக்கிறார்.



சாந்தகுமார் (மெளனகுரு ) : கமர்ஷியல் படங்களில் கில்லியான இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சாந்தகுமார். ஆனால் தனது குரு போல் கமர்ஷியல் படம் எடுக்காமல் அமைதியாக 'மெளனகுரு' என்கிற த்ரில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார்.

சஸ்பென்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் த்ரில்லரை சுவாரஸ்யமாகப் படைத்த விதத்தில் மௌனமாகவே கவர்கிறான் குரு. அடுத்த அடுத்த படங்கள் மூலம் 2012ல் முன்னணி இயக்குனராக வலம் வருவார் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



ஜிப்ரான் ( 'வாகை சூட வா ' இசையமைப்பாளர்) : ' போறானே.. போனாறானே ' என்று தொடங்கும் வாகை சூட வா படத்தில் வந்த மெலடி பாடலால் ரசிகர்கள் மனதில் வாகை சூடியவர்.

தனது அடுத்த அடுத்த படங்களின் இசை மூலம் வலம் வர உழைத்துக் கொண்டிருக்கிறார்.




சத்யா ('எங்கேயும் எப்போதும்' இசையமைப்பாளர் ) : எங்கேயும் எப்போதும் படத்தின் பாடல்கள் வெளியான போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் 'மாசமா.. ஆறு மாசமா'. படத்தின் மற்ற பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் அசத்தினார் சத்யா.

பல்வேறு இயக்குனர்கள் சத்யாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆகையால் 2012ல் தமிழ்த் திரையில் இவரது இசை பங்களிப்பு அதிகமாக இருக்கும்.






அனிருத் ('  3 '  இசையமைப்பாளர் ) : உலகமே WHY THIS KOLAVERI பாடலின் இசையமைப்பாளர் யார் என்று தேடிய போது,  தெருவில் கிரிக்கெட் ஆடும் சின்னப் பையன் போலிருக்கும் அனிருத் தான் அது என்றால் ஆச்சர்யப்பட்டார்கள்.

WHY THIS KOLAVERI பாடலுக்கு  இசையமைக்க  வெறும் 5 நிமிடங்கள் தான்  தேவைப்பட்டது என பேட்டியில் தெரிவித்தார். WHY THIS KOLAVERI பாடல் YOUTUBE இணையத்தில் GOLDEN AWARD வென்று இவருக்கு பெருமை சேர்த்தது. 2012 பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார். முதல் பாலிலேயே சிக்ஸர் !




இனியா ( 'வாகை சூட வா' நாயகி  ) : படத்தின் பல காட்சிகளில் தன்னுடைய கண்களால் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.  படத்தைப் பாதி தாங்கி நிற்பது அறிமுக நாயகி இனியாவின் அந்த இரண்டு கண்கள்தான். விமலிடம் காசு கறந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவதாகட்டும், விமலுக்குத் தன் மேல் ஈர்ப்பு இருப்பது தெரிந்ததும் பாவாடையை இடுப்பில் சொருகிக்கொண்டு நொடிக்கு ஒரு எக்ஸ்பிரஷனுடன் ஆடுவதாகட்டும்... வண்டல் தேவதை!

அடுத்து அருள்நிதியுடன் 'மௌனகுரு'. 2012ம் ஆண்டு பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



தனுஷ் ( பாடலாசிரியர் )
: மயக்கம் என்ன படத்தில் இளைஞர்களை கவரும் விதத்தில் ' காதல் என் காதல்' என்கிற பாடலை எழுதி பாடினார் தனுஷ். இளைஞர்கள் பலரது மொபைலின் காலர் டியூனாக இருந்தது அந்த பாடல்.

அடுத்ததாக ' 3 ' படத்தில் எழுதி பாடிய WHY THIS KOLAVERI DI பாடல் மூலம் உலகம் அறிந்த பிரபலமாகி விட்டார். பிரதமரின் அழைப்பு, ரத்தன் டாடாவுடன் சந்திப்பு, அமிதாப்பின் பாராட்டு என ஒரே பாட்டின் மூலம் புகழின் உச்சிக்கு போயிருக்கிறார்.

நடிப்பு, பாடலாசிரியரை தொடர்ந்து 2012ல் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். ( 2012 வருஷ டிசம்பர்ல புதுமுக இயக்குனர் லிஸ்ட்ல உங்க பேரு வர வாழ்த்துக்கள் )





சாரா ( தெய்வத்திருமகள் ) : தெய்வத்திருமகள் படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது.  அவ்ளோ அழகுப் பாப்பா.  அள்ளி அணைத்துக் கொஞ்சத் தூண்டும் துறுதுறுப்பும் அவ்வளவு பாந்தமான நடிப்புமாக... தெய்வத் திருமகள்தான்!   விக்ரம் சொல்லும் குழப்பக் கதைகளால் சோர்வுற்றுத் தூங்குவதும், 'குழந்தை’ தகப்பனைச் சமயங்களில் தாயாக அதட்டி வழிக்குக் கொண்டுவரும் சமயத்திலும்  நெகிழவைத்தாள் சாரா.

'கிருஷ்ணா வந்தாச்சு... நிலா வந்தாச்சு’ என்று கைகளில் பொம்மை உருவம் வரைந்து இருவரும் பேசிக்கொள்வதும், 'மரம் ஏம்ப்பா பெருசா இருக்கு?’ என நிலா கேட்க, 'அது அப்பா பெருசா இருக்குல்ல’ என விக்ரமும் குழந்தையாகவே பதில் சொல்வதும்... ரசனை அத்தியாயங்கள்! க்ளைமாக்ஸ் நீதிமன்றக் காட்சிகளில் 'நீதான் என்னை விட்டுட்டுப் போய்ட்டே’ என்று கோபித்துக்கொண்டு, பிறகு மெதுவாக முகம் மாறிப் பாசம் வழிய சாரா பார்க்கும் காட்சியும், அதற்கு விக்ரமின் வெகுளி வெள்ளந்தி ரியாக்ஷனும்... ஏ க்ளாஸ்!





No comments:

Post a Comment