என்னதான் தமிழ் சினிமாவின் தலைநகரமாக சென்னை விளங்கினாலும், ஏராளமான திரைப்படங்களின் கதைக்களம் சென்னை தவிர்த்த பகுதிகளாகத்தான் இருக்கும். மதுரை மதுரை என்று எந்த படத்தைப் பார்த்தாலும் மதுரை மாவீரன்களை மையமாக வைத்தே ஏகப்பட்ட படங்கள் வெளியாக, ஒரு கட்டத்தில் மதுரை மைந்தர்களே சில காலம் மதுரை பக்கமே போக வேண்டாம்பா.. என்று முடிவெடுக்கும் நிலைமை வந்தது. ஒரு பக்கம் இப்படி சென்னையை கண்டுகொள்ளாமல் இருந்தாலும், மணிரத்னம், கௌதம் மேனன், வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் தயவால் அவ்வப்போது சென்னையும் சில திரைப்படங்களில் தலை காட்டியது. தற்போது மற்றொரு புதுமுக இயக்குநரும் இவர்களுடைய பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் 'அட்டகத்தி'. தலைப்பை படித்தவுடனே தெரிந்திருக்கும் இது அக்மார்க் உள்ள சென்னை படம் என்று.
தலைப்பு அட்ட கத்தியாக இருக்கலாம் ஆனால், படத்தின் பாடல்களும், டிரைலரும் இது சார்ப்பான கத்தி என்பதை புரிய வைத்தது. வட சென்னையில் இருந்து கல்லூரிக்கு வரும் இளைஞனின் காதல் காவியம்தான் இந்தப் படம். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப.ரஞ்சித் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று (ஜன.9) சென்னையில் நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட பாடல்களும் சரி, மேடையில் இசைக்கலைஞர்கள் நேரடியாக பாடிய பாடல்களும் சரி அத்தனையும் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் ரகம். குறிப்பாக கபிலன் எழுதி, கானா பாலா பாடியிருக்கும் 'ஆடி போனா ஆவணி இவ ஆள மயக்கும் தாவணி...' என்ற கானா பாடல். படத்தின் டைட்டில் டிசைன், பேனர் டிசைன் என ஒவ்வொன்றையும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த ஜாக்பாட் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையை இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஹீரோவாக தினேஷ் என்பவர் அறிமுகமாக, இவருக்கு ஜோடியாக நந்திதா, ஐஸ்வர்யா, ஷாலி ஆகிய மூன்று பெண்கள் நடிக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் அத்தனைப் பேரும் அநியாயத்திற்கு சாதாரண முகங்களாக இருக்கிறார்கள். இப்படி கதைக்கான பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும் இப்படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். இப்ப எங்கய்யா தாவணிய பாக்க முடியுது... துப்பட்டானு மாத்திக்கோங்க....
No comments:
Post a Comment