டிசம்பரில் வெளியாக இருக்கும் 'அட்வெஞ்சர் ஆஃப் டின்டின்’ அனிமேஷன் படத்துக்கு இப்போதே உலக எதிர்பார்ப்பு! காரணங்கள் இரண்டு. முதலாவது, டின்டின். இரண்டாவது, இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
முதலில் டின்டின்... டின்டின் என்பது பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹெர்ஜே என்கிற ஓவியரால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரம். பால் வடியும் முகம், ஸ்பைக் ஹேர் ஸ்டைல், ஸ்மார்ட் டிரெஸ்ஸிங், நிறைய புத்திசாலித்தனம், கொஞ்சம் குழப்பம், கூடவே ஸ்நோ என்கிற ஒரு நாய். இதுதான் டின்டின். சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத, நல்லதுக்குத் துணை நின்று, கெட்டதுக்கு கெட்-அவுட் சொல்லும் கேரக்டரை 1929-ல் யாருக்குத்தான் பிடிக்காமல் இருந்திருக்கும்? முதல் கார்ட்டூன் தொகுப்பே செம ஹிட். அப்படியே டின்டினை இளம் நிருபராக்கி, துப்பறியும் வேலைகளுக்கு அனுப்பினார் ஹெர்ஜே. அவனுக்கு நிறைய மொழிகள் தெரியும். அதனாலேயே பல நாடுகளுக்கும் பறப்பான். டாங்க், விமானம், ஹெலிகாப்டர், குதிரை எனச் சகலமும் லைசென்ஸ் இல்லாமலேயே ஓட்டத் தெரியும். தண்ணீரில் சம்மர் சால்ட் அடிப்பான். யோகா தெரியும். கை செம ஸ்ட்ராங். ஓங்கி அடித்தால் எதிரிக்கு உச்சா வந்துவிடும். அவனுக்குச் சொந்தக்காரர்கள் என்று யாரும் கிடையாது. எதிரி எதை வைத்து மிரட்ட முடியும்? பல நாடுகளுக்குப் பறந்து, மர்மங்களை உடைத்து, எதிரிகளைத் துவைத்துத் தொங்கப்போட்டான் டின்டின்.
எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் ஏதாவது ஒரு நெகட்டிவ் பாயின்ட் இருக்குமே? ஜேம்ஸ் பாண்டுக்கு பெண்கள் சகவாசம் மாதிரி டின்டினுக்கு ஆழ்ந்த சிந்தனை. அப்படி சிந்தனை வயப்படும்போது சுற்றி நடக்கும் விஷயங் களைக் கவனிக்கத் தவறிவிடுவான். முக்கியமான திரைக்கதைத் திருப்பங்களுக்கு டின்டினின் இந்த நெகட்டிவ்வைப் பயன்படுத்திக்கொண்டார் ஹெர்ஜே. படிக்கும்போது பி.பி. ஏற, சேல்ஸ் எகிறியது. 80 மொழிகளில் 350 மில்லியன் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. டின்டினும் ஸ்நோ நாயும் மக்களின் ஆதர்ச நாயகர்கள் ஆகிவிட்டார்கள். டி-ஷர்ட்கள், காபிக் கோப்பைகள் என எங்கும் எதிலும் டின்டின்தான்.

'டின்டினுக்கு வயது என்ன?’ என்று கேள்வி வந்தபோது, எல்லாரும் ஹெர்ஜே வைப் பார்த்தார்கள். டெலிவிஷன் பேட்டி ஒன்றில், 'இளம் நிருபர் என்பதால் 17 வைத்துக்கொள்ளலாம்’ என்று வயதுச் சான்றிதழ் கொடுத்தார் ஹெர்ஜே.
காலண்டரில் தேதிகள் கிழியாத, என்றும் இளமையாக இருக்கும் டின்டின் சினிமா கேரக்டராக வந்தால் எப்படி இருக்கும்?
இப்போது ஸ்பீல்பெர்க்... 1981-ம் வருடம். ஸ்பீல்பெர்க் தான் இயக்கிய 'ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ (Raiders Of The Lost Ark) படத்தின் பத்திரிகை விமர்சனங்களை படித்துக்கொண்டு இருந்தார். பிரெஞ்ச் பத்திரிகை ஒன்றின் விமர்சனத்தில் டின்டின் என்கிற வார்த்தையைப் பார்த்ததும் ஸ்பார்க் அடித்தது. மொழிபெயர்த்துப் படித்தபோது, டின்டினையும் படத்தில் வந்த ஒரு கேரக்டரையும் ஒப்பிட்டு விமர்சனம் எழுதப்பட்டு இருக்க, டின்டின் யார் என்று தேட ஆரம்பித்தார் ஸ்பீல்பெர்க். டின்டின் கார்ட்டூன் புத்தகங்களை வாங்கிப் படித்தவர் அசந்துவிட்டார். தலை சுற்றவைக்கும் புதிர்கள், அதை அவிழ்க்கும் புத்திசாலித்தனம், கூடவே இருந்த டார்ச்சர் கொடுக்கும் கேப்டன் ஹேடாக் கேரக்டர் என எல்லாமே ஹிட் சினிமா ஃபார்முலாவில் இருந்தன. உடனே, ஹெர்ஜேவை வரச் சொல்லி சந்தித்தார் ஸ்பீல்பெர்க். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 'ரெடி... டேக்... ஆக்ஷன்’ மட்டும்தான் சொல்ல வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஹெர்ஜே இறந்துவிட்டார். மனம் உடைந்து டின்டினை ஓரங்கட்டிவைத்தார் ஸ்பீல்பெர்க்.
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது டின்டினைத் தூசி தட்டி எடுத்திருக்கிறார். இப்போது பாய்மரக் கப்பலில் பாய்ந்து, படகில் தத்தளித்து சாகசங்கள் செய்துகொண்டு இருக்கிறான் டின்டின். இந்தப் படத்தை இயக்க முடிவு செய்தபோது, தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனிடம் ஸ்பீல்பெர்க் சொன்ன வார்த்தைகள் இது... ''நான் டின்டினின் தீவிர ரசிகன். என்னைப்போலவே பல மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து 800 மில்லியன் மக்களிடம் அவர்களுடைய கனவு ஹீரோ வைத் திரையில் காட்டப்போகிறோம். வெறும் கைத்தட்டல்கள் மட்டும் போதாது. ஸ்பாட் லைட்டில் கவரைப் பிரித்து 'இந்த ஆஸ்கர் விருது டின்டினுக்குச் செல்கிறது!’ என்று குரல் ஒலிக்க வேண்டும்!''
சொன்னதுபோலவே படத்தின் வெற்றியை மட்டும் பார்க்காமல், ஆஸ்கர் விருதுக்கும் சேர்த்து உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஸ்பீல்பெர்க்.
படத்தின் கதை என்ன? சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். மீதியை வெள்ளித்திரையில் காண்க. சுபம்!
No comments:
Post a Comment