Tamil News

Sunday, January 8, 2012

மக்களை சந்திக்க போறத நினைச்சா சந்தோஷமா இருக்கு! - சூர்யா


இந்தியில் அமிதாப், ஷாருக் என மெகா ஸ்டார்களை டி.வி-யில் அறிமுகப்படுத்தி 'இடியட் பாக்ஸ்' ஆபீஸ் ஹிட் அடித்த 'கோன் பனேகா குரோர்பதி' கான்செப்ட்டில், இப்போது சூர்யா. விஜய் டி.வி -யில் ஒளிபரப்பப்பட இருக்கும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' மூலம் சின்னத் திரையில் முதல்முறையாக... சூர்யா.
வெல்கம் டு சின்னத் திரை... டி.வி. பக்கம் சூர்யாவா?
சினிமா ரசிகர்களைவிட டி.வி. ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டில் ஒன்றரைக் கோடிப் பேர்தான் தியேட்டரில் டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கிறாங்க. ஆனா, ஆறு கோடிப் பேர் டி.வி. பார்க்கிறாங்க. சிட்டியில் உள்ளவங்களுக்கு என்னைத் தெரியும். இப்பவும் என்னை யார்னே தெரியாத எவ்வளவோ மக்கள் இருக்காங்க. எனக்கும் அவங்களைத் தெரியாது. பரஸ்பரம் ரெண்டு பேரும் அறிமுகம் ஆக ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சு இருக்குன்னு நினைக்கிறேன்!
இது சினிமா மாதிரி கிடையாதே... அவ்வளவு கூட்டம் முன்னாடி லைவ்வா பண்ணணுமே?
113 நாடுகளில் 83 மொழிகளில் இந்த ஷோ பண்ணிட்டாங்க. என்கிட்ட இந்த ஷோ பண்ணச் சொல்லிக் கேட்டப்போ, 'முதல்ல இந்த புரொகிராமை நான் ஒரு ரசிகனா, பார்வையாளனா உட்கார்ந்து பார்க்கணும்'னு சொன்னேன். மும்பையில் அமிதாப்பச்சன் ஷோவை நேரடியா பார்க்க ஏற்பாடு பண்ணினாங்க. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் தயாராகும் விதம், ஷோ நடத்தும் ஸ்டைல் எல்லாம் பார்த்துட்டு வந்து, நான் நிறைய ஹோம் வொர்க் பண்ணின பின்னாடிதான் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. என் மூலமா யாரோ ஒருத்தரோட வாழ்க்கை சந்தோஷமா மாறினா, அது போதும். சமீபகாலமா நான் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளயே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் இருந்துச்சு. இப்போதான், நம்ம தமிழ் நாட்டோட பல பகுதி மக்களைச் சந்திக்கப்போறேன். அவங்ககிட்ட இருந்து நிறையக் கத்துக்கப்போறேன். அதை நினைச்சா சந்தோஷமா இருக்கு!
அமிதாப், ஷாருக் கான் இவங்க இரண்டு பேரில் யாரோட ஸ்டைல் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?
ரெண்டு பேருமே எக்ஸ்ட்ரீம்னு சொல்வேன். அமிதாப் சார் ரொம்ப ரிசர்வ்டு டைப். இந்த புரொகிராமுக்குப் பிறகு, எல்லார்கூடவும் சகஜமாப் பேச ஆரம்பிச்சிட்டாராம். ஷாருக் ரிகர்சலுக்குச் சரியா வர மாட்டாராம். ஆனா, ஸ்பாட்ல பின்னி எடுப்பாராம். யாராவது தோத்துப் போயிட்டா, முகத்துல அடிச்ச மாதிரி சொல்லாம, சீட்டை விட்டு இறங்கி, அவங்களைக் கட்டிப் பிடிச்சு, தன்மையா சொல்வாராம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல். என் ஸ்டைல் எப்படி இருக்குனு பார்த்துட்டுச் சொல்லுங்க!
இனிமே மக்கள்கிட்ட நிறைய பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்போறீங்க... உங்ககிட்ட நாங்க கேள்வி கேட்கலாமா?
(சிரிக்கிறார்!) இந்த புரொகிராம் நடத்துறவங்களுக்கு நிறையத் தெரிஞ்சு இருக்கணும்னு அவசியம் இல்லை. எது சரியான பதில்னு மட்டும் சொன்னாப் போதும் (உதட்டில் விரல் வைத்துக் கொஞ்ச நேரம் யோசிக்கிறார்!) கேளுங்க... என்னதான் தெரியும்னு பார்க்கலாம்!
ரிச்சா கங்கோபாத்தியாய் என்றால் என்ன அர்த்தம்?
அவங்க 'மயக்கம் என்ன' ஹீரோயின்னு தெரியும். அர்த்தம் தெரியலையே!
(பதில்: கங்கை நதியில் நீராடியவள் என்று அர்த்தம்!)
தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரின் பெயர் என்ன?
தங்கபாலு இல்லை. புதுசா ஒருத்தர் வந்திருக்காரு. பேர் படிச்சேன். பட் ஞாபகம் இல்லையே!
(பதில்: ஞானதேசிகன்)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பெயர் என்ன?
ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க? ராமதாஸா, அவர் இல்லையே... தெரியலையே?
(பதில்: ஜி.கே.மணி)
ஓ.கே. நீங்க டி.வி. ஷோ பண்ணப்போறதுக்கு, வீட்டில் என்ன ரெஸ்பான்ஸ்?
ஜோதிகாகிட்ட சொன்னப்ப, 'ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். ஆனா, அதுக்காக டைம் செலவழிக்க முடியுமா? எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டு கஷ்டப்படாதே!'னு சொன்னாங்க. அப்புறம், 'நீ கண்டிப்பா பண்ணணும். எப்பவுமே ஒரு கம்ஃபர்ட் ஜோன்ல இருக்கிறதைவிட, நமக்குக் கஷ்டமாத் தோணும் விஷயத்தையும் பண்ணிப் பார்க்கணும். அப்போ தான் சின்ன வளர்ச்சியைப் பார்க்க முடியும்!'னு என்கரேஜ் பண்ணினாங்க! 
கல்யாணம் முடிஞ்ச பின்னாடி ஹீரோயின்கள் சினிமா, சீரியல்னு வந்துடுறாங்க. ஜோதிகா வர வாய்ப்பு இருக்கா?
விளம்பரப் படங்கள்தான் இப்போதைக்கு நடிச்சிட்டு இருக்காங்க. ஒரு நாள் முழுக்க ஷூட்டிங் இருந்தாலே, 'குழந்தைங்க ரெண்டு பேரையும் வீட்ல விட்டுட்டுப் போகணுமே'னு ஃபீல் பண்றாங்க. இப்பவே "நீங்க ரெண்டு பேருமே வெளியில போயிடுறீங்க. இங்கே என்கூட விளையாட யாரும் இல்லை. நீங்க எப்போ வருவீங்க? நான் தூங்கினதுக்கு அப்புறமா? அப்படி என்ன உங்களுக்கு வேலை?"னு தியா கேட்கிறா. இந்த மாதிரி சென்டிமென்ட் பிளாக்மெயில்தான் இப்போ எங்க வீட்ல அதிகமா நடந்துட்டு இருக்கு!- அழகாகச் சிரிக்கிறார் அப்பா சூர்யா.

No comments:

Post a Comment