ரஜினி - கமல், இந்த இரண்டு கலைக் குதிரைகளையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் ரகசியம் தெரிந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஒரு காலத்தில் 'பாக்கெட் மணியில்கூட படம் எடுத்துக் கொடுப்பவர்' என்று சிறிய தயாரிப்பாளர்கள் கொண்டாடினார்கள் ரவிக்குமாரை. இன்று பிரம்மாண்ட படங்களின் அடையாளமாகிப் போனார். 'கோச்சடையான்' டிஸ்கஷனில் இருந்தவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
ரஜினி - கமல் இருவரிடமும் ஈஸியாக செட் ஆகிடுறீங்களே, எப்படி?
ரஜினி - கமல் மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் ஈஸியாக வேலை செய்ய, ஒரே ஒரு ரகசியம்: நமக்குள்ள ஈகோ இருக்கக்கூடாது. அடுத்தவர் ஈகோவையும் தட்டி எழுப்பக்கூடாது. அப்புறம் அவங்களைப் பற்றி நல்லா புரிஞ்சு வெச்சுக்கணும் அல்லது தெரிய வைக்கணும். இப்படி இருந்தால் யார் கூடவும் வேலை பார்க்கலாம். இது சினிமாவுக்கு மட்டுமில்ல எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.
ரசனை வேறுபாட்டில் கமல் - ரஜினியை எப்படி பார்க்குறீங்க...?
நான் ஏற்கெனவே சொன்னதுபோல ரஜினி மாஸ் - கமல் க்ளாஸ். ரஜினி, கமல் படத்தை பார்த்துட்டு, 'என்னால இப்படியெல்லாம் நடிக்க முடியாது'ன்னே சொல்லியிருக்கார். ரஜினி படத்தை கமல் நடிக்க முடியும். ஆனால், அவர் நடிக்க மாட்டார். வெற்றி பெற ஒருவர், தனது மைனஸ் என்ன ப்ளஸ் என்னன்னு தெரிஞ்சுக்கணும். மைனஸை ப்ளஸ்ஸா மாத்திக்கவும் தெரிஞ்சுக்கணும். அவங்க ரெண்டு பேருமே அப்படித்தான் இருக்காங்க.
சுல்தான் தி வாரியர் படத்தை தான் கோச்சடையானாக எடுப்பதாக ஒரு தகவல் இருக்கே?
'சுல்தான் தி வாரியர்' படத்தை எப்பவோ சுருட்டி மூலையில் போட்டாச்சு. இது அந்தப் படம் இல்லை. இது என்னோட கதையில் வர்ற படம்.
சரி... 'கோச்சடையான்' யார்?
சரித்திரப் பாடத்தில் வர்ற ஒரு ஹீரோ பெயர் 'கோச்சடையான்', அவ்வளவுதான். பெயரோட கம்பீரத்திற்காக தான் இதை தேர்வு செய்தோம். இந்த கோச்சடையானுக்கும், ராணாவுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதைச் சொன்னால் கதை தெரிஞ்சிடும், வேண்டாம். மற்றபடி சரித்திரத்தில் 'கோச்சடையான்' என்கிற ஒருவர் இருந்திருக்கார் மதுரையில் இப்படி ஒரு ஊருக்குப் பெயர் இருக்கு என்கிற விஷயங்கள் படத்துக்கு பெயர் வெச்ச பிறகு தான் எல்லாருக்கும் தெரிஞ்சது. ஸோ... இந்த வரலாற்றுப் பெயரை நாங்கள் பயன்படுத்தியிருக்கோம், அவ்வளவுதான். அந்த சரித்திர கோச்சடையானுக்கும் எங்கள் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை.
நிறைய படங்களை இயக்கிய அனுபவம் உள்ள நீங்களே படத்தை இயக்காமல் சௌந்தர்யாவிடம் கொடுத்தது ஏன்?
பர்ஃபாமென்ஸ் கேப்சரிங்னு ஒரு டெக்னாலஜி. ஒருத்தர் நடிப்பதை அப்படியே உள்வாங்கி அது டிஜிட்டலில் பிரிண்ட் அவுட் ஆகிடும். ஒரு பெரிய போர்க்களத்திலோ, கடலிலோ, புயலிலோ நடப்பது மாதிரியான காட்சிகளை எடுக்க நடிகர்கள் அந்தந்த இடத்துக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டூடியோவிலே எடுத்துக்கலாம். இப்போது ரஜினியின் உடல் நிலைக்கு இங்கல்லாம் கூட்டிப்போக முடியாது. ரஜினி நடிக்கத் தயார்தான். நாங்கதான் சம்மதிக்கல. அதுக்கு இந்த டெக்னாலஜி உதவியாக இருக்கு.
இந்தியாவிலேயே இந்த டெக்னாலஜியில் வர்ற முதல் படம் இதுதான். இந்த விஷயத்துல எனக்கு அனுபவம் குறைவு என்பதால், இந்த டெக்னாலஜி தெரிந்த சௌந்தர்யாவே இதை டைரக்ட் பண்றார். மற்றபடி ஸ்டூடியோவில் எடுக்கும் காட்சிகளை நான்தான் எடுக்கப் போறேன்.
இதற்கான டெக்னாலஜி வசதியுள்ள ஸ்டூடியோக்கள் இங்கேயே கட்டப்படுவதாக கேள்விப்பட்டோமே?
ஆமாம்... ஏற்கெனவே உள்ள சின்னச்சின்ன ஸ்டூடியோக்களை பெருசா கட்டிக்கிட்டிருக்கோம். புதுசாகவும் ஒரு ஸ்டூடியோ ரெடி பண்றோம். சில காட்சிகளை லண்டனில் எடுக்க வேண்டியிருக்கு. இதற்காக ரஜினியை லண்டனுக்கு கூட்டிப் போகப்போறோம். அந்த ஸ்டூடியோவில் அதற்கான தனி காஸ்ட்யூம் இருக்கு. 'பாடி சூட்'னு பெயர். அதை போட்டுக்கிட்டுதான் நடிக்கணும். சுற்றிலும் நிறைய கேமராக்கள் இருக்கும். சின்னச்சின்ன உடலசைவைக்கூட துல்லியமா பதிவு பண்ணும்.
உங்க டைரக்ஷன்ல அடுத்த படம் எப்ப?
இந்தப் படம் முடிந்த பிறகு இந்தியில் சஞ்சய்தத்தை வைத்து பண்ணலாம்னு பேசிக்கிட்டிருக்கேன். அது முடிஞ்சு வர்றதுக்குள்ள ரஜினி 'ராணா'வுக்கு ரெடியாகிடுவார்.
No comments:
Post a Comment